Advertisement |
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பீல்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
தொடக்கம் முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேத்யூஸ் வீசிய இரண்டாவது ஓவரில் மூன்றாவது நடுவரின் உதவியுடன் தவானை வெளியேற்றியது இலங்கை அணி.
தவான் ரன்கணக்கைத் துவங்காமலேயே ஆட்டமிழக்க, கேப்டன் ரோகித் ஷர்மா 2 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளைச் சந்தித்து ரன்னே எடுக்காமல் மோசமான சாதனையுடன் வெளியேறினார்.
அதிக பந்துகளைச் சந்தித்து ரன் கணக்கைத் தொடங்காமல் வெளியேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முதல் பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் பவர் பிளேவில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே. மணீஷ் பாண்டே 2 ரன்களிலும், அறிமுகவீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
16 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்துவந்த பாண்ட்யா 10 ரன்களிலும், புவனேஷ்வர் குமார் ரன்னே எடுக்காமலும் வெளியேற இந்திய அணி 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல், 10 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 8-வது விக்கெட்டுக்கு குல்தீப் யாதவுடன் கைகோர்த்த மகேந்திரசிங் தோனி, ரன் குவிப்பை வேகமாக்கினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பும்ரா ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தனிஒருவனாய் போராடிய தோனி, 78 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் அரைசதமடித்தார்.
ஒரு கட்டத்தில் 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணி 100 ரன்களை தோனியால் எட்டியது. பொதுவாக ரன்மழை பொழியும் தரம்சாலா மைதானத்தில் இந்திய அணி 36.3 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.
கடைசி விக்கெட்டுக்கு சஹாலுடன் கைகோர்த்த தோனி, 25 ரன்கள் சேர்த்தார். தோனி 87 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
0 comments: