Wednesday, December 6, 2017

மனைவியைக் கொலைசெய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை

Advertisement


யாழ்ப்பாணம் - வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து அவரை கொலை செய்ய குற்றத்திற்காக கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார்.
வடமராட்சி, மணற்காடு - குடத்தனையில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது-25) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த நீதிபதி இளஞ்செழியன்,
“வழக்கின் எதிரி கொலை செய்யும் பொது நோக்கத்தோடு திட்டமிட்டு அவரது மனைவி மீது தீப்பற்றவைத்தார் என்பது வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டவில்லை.
எதிரி கைமோசக்கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற முடிவுக்கு இந்த மன்று வருகிறது. அந்தக் குற்றத்துக்காக எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், குற்றவாளி 5 ஆயிரம் ரூபாய் தண்டம் பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று தீர்ப்பளித்தார்.
வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகிவந்தார்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: