Advertisement |
வெள்ளவத்தை கடற்கரையிலும் அதிகளவான மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழமையை விடவும் நேற்றையதினம் பெருந்தொகையான மீன்கள் வெள்ளவத்தை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.
அண்மைக்காலமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள கடற்கரைகளில் மீன்கள் பெருமளவில் ஒதுங்கி வரும் நிலையில், வெள்ளவத்தையிலும் ஒதுங்கியுள்ளமை அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் கடல் பகுதியில் அதிகமான மீன்கள் வந்துள்ளமை தொடர்பில் விசேட ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .
கடல் வெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றம், அமிலத்தன்மை மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெனரால் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையில் மீன்கள் ஒதுங்கியமை குறித்து நாரா நிறுவனத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடற்கரையில் வழமையை விடவும் அதிகளவான மீன்கள் ஒதுங்குவதால் சுனாமி அனர்த்தம் ஏற்படும் என்று கூற முடியாது. அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
சுனாமி பேரலைகள் ஏற்படுவது என்றால் கடலுக்குள் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்படும் பட்சத்தில் அது சாத்தியமாகும் என நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அனில் பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழ் கடலில் 10 - 20 கிலோ மீற்றர் தூரத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதுவரை அப்படியான பூமியதிர்ச்சிகள் ஒன்றும் பதிவாகவில்லை. இது குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இன்று அல்லது நாளை பூமியதிர்ச்சி ஏற்படும் என்பதனை எங்களால் முன்கூட்டியே கூற முடியாது.
அதிக பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் கூட இதனை முன்கூட்டியே கூறமுடியாத நிலை காணப்படுவதாக தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனர்த்தம் தொடர்பில் தகவல் அறிந்து கொள்வதற்காக 117 என்ற இலக்கம் 24 மணித்தியாலமும் செயற்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதி கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
0 comments: