Friday, December 29, 2017

புதுமண தம்பதியரா நீங்கள் அப்போ இந்த இடத்துக்கு ஹனிமூன் போங்க!

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல் ரஷ்யா கட்டுகிறது.

பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி கழகமும் இணைந்து இந்த ஆய்வகத்தை உருவாக்கி வருகிறது. 
அதற்காக இதுவரை 150 பில்லியன் டாலர் அதாவது ரூ,96 லட்சத்து \75 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தையடுத்து, விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டல் அமைக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. 
அங்கு கட்டப்படும் ஓட்டலில் 4 ஆடம்பர அறைகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொன்றும் 4 கன மீட்டர் அளவில் இருக்கும். இங்கு மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம் வைபை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளதாம்.
விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர இந்த ஓட்டல் கட்டப்படுகிறது. இந்த ஓட்டல் ரூ.2100 கோடியில் இருந்து ரூ.3360 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து விண்வெளியில் ஓட்டல் கட்டுகின்றனர். 
இங்கு ராக்கெட் மூலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும். அவர்கள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் தங்கலாம். 
அவர்கள் இங்கு மேலும் ஒரு மாதம் தங்கவும், விண்வெளியில் நடக்கவும் கூடுதலாக ரூ.130 கோடி வசூலிக்கப்படும். விண்வெளியில் நடக்க ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள்.

கின்னஸ் சாதனை படைத்த ஆடை! அப்படி என்ன இருக்கு?

"பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக 8,095 மீட்டர் நீள திருமண ஆடை தயாரிக்கப்பட்டது.

 அந்த திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 15 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்தனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிக நீளமாக இருக்கும் இந்த உடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. "

Monday, December 18, 2017

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட சாதாரண தர மாணவன் விசாரணையில்

கைப்பேசியை பயன்படுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பதில் எழுதிய மாணவர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற கணிதப் பாட பரீட்சையின் போது, குறித்த மாணவர் கைப்பேசியின் ஊடாக விடைகளைப் பெற்று எழுதிக் கொண்டிருந்த வேளையில், பரீட்சை கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் - வலிசிங்க ஹரிச்சந்திர பரீட்சை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Wednesday, December 13, 2017

உலகில் அதிகம் குண்டுவீசப்பட்ட நாடு

உலகில் அதிகம் குண்டுவீசப்பட்ட நாடு அல்லது இடம் லாவோஸ்.சுமார் இரண்டு மில்லியன் குண்டுகள் 1964-1973 வரை வியட்நாம் யுத்தத்தில் போடப்பட்டது.சுமார் 270 மில்லியன் கிளஸ்டர் குண்டுகள் போடப்பட்டன.சுமார் 80 மில்லியன் கிளஸ்ரர் குண்டுகள் இன்னும் வெடிக்காமல் புதையுண்டுள்ளன.சுமார் 20.000 மக்கள் இந்த புதையுண்ட வெடிபொருட்களால் இறந்துள்ளனர்.சுமார் வருடத்துக்கு 50 பேரும் தற்போது இறக்கின்றனர்.2008 இல் 310 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 12, 2017

உலகின் மிகப்பழமையான விமானசேவை

உலகின் மிகப்பழமையான மற்றும் அதே பெயரில் தற்போதும் பாவனையில் உள்ள ஒரே விமானசேவை நெதர்லாந்தின் KLM விமானசேவையாகும்.1919 இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்களை கூகுள் செய்தால் இன்ப அதிர்ச்சி: அசத்தும் கூகுள்

பிரபலங்களை கூகுள் செய்தால் இன்ப அதிர்ச்சி: அசத்தும் கூகுள்
கூகுளில் பிரபலங்களை தேடினால் வழக்கமான டெக்ஸ்ட் பதில்களை வழங்காமல், செல்ஃபி வீடியோ வடிவில் பதில் வழங்கும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் இனி கூகுளில் பிரபலங்களிடம் கேள்விகளை எழுப்பும் போது செல்ஃபி வீடியோ மூலம் கூகுள் உங்களுக்கு பதில் வழங்கும். எடுத்துக்காட்டாக, நடிகர் ரஜினியிடம் ஏதேனும் கேள்வி கேட்கும் பட்சத்தில், உங்களது கேள்விகளுக்கு செல்ஃபி வீடியோ வடிவில் பதில் அளிக்கப்படும்.

தற்சமயம் இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய அம்சத்தின் மூலம் மொபைல் போனின் தேடல்களுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் இருந்தே பதில் பெற முடியும். என கூகுள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


கூகுளில் உங்களுக்கு பிடித்த பிரபலங்களிடம் நீங்கள் கேள்விகளை பதிவிட வேண்டும், உங்களது கேள்விக்கு சிறிய செல்ஃபி வீடியோ மூலம் பதில் அளிக்கப்படும். இதில் வளர்ந்து வரும் பிரபலங்கள் முதல் நன்கு அறிமுகமான அதிக ரசிகர்களை கொண்ட பிரபலங்கள் இடம் பெற்றிருப்பர். இந்த செல்ஃபி வீடியோக்கள் ஏற்கனவே கூகுள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

முதற்கட்டமாக பிரியண்கா சோப்ரா, வில் ஃபெரெல், டிரேஸ் எல்லிஸ் ராஸ், கினா ரோட்ரிகியூஸ், கெனான் தாம்சன், அலிசன் வில்லியம்ஸ், நிக் ஜோனஸ் மற்றும் சில பிரபலங்களை கொண்டு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பதிவிடப்பட்ட வீடியோக்கள் என்பதால் அதிகம் பேர் கேட்க விரும்பும் பொதுவான கேள்விகளுக்கு பிரபலங்கள் பதில் அளிப்பது போன்று இந்த அம்சம் இயங்குகிறது.

தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்படும் இந்த அம்சத்தில் மேலும் அதிகளவு பிரபலங்கள் சேர்க்கப்படுவர் என்றும் மற்ற சந்தைகளிலும் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. எனினும் நமது நாட்டில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

நீங்கள் தவறவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி?

நீங்கள் தவறவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.

உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம்.

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும்.


வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் -- Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

Monday, December 11, 2017

காலநிலையில் திடீர் மாற்றம்..! ​பொதுமக்களே அவதானம்!

எதிர்வரும் தினங்களில் மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக கால நிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது..

காலநிலை அவதான நிலையத்தினால் இன்று காலை 5.30 இற்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கால நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் வட மேல் மாகாணங்களில் இவ்வாறான கால நிலை நிலவகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும்.

இதன்காரணமாக , மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி போராட்டத்தை கைவிட ஜனாதிபதி கோரிக்கை

இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன.

இதற்கமைய, 688,573 பாடசாலை மற்றும் தனியார் பரிட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதன்படி, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பரிட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாதாரண தர மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது


சட்டவிரோதமாக டுபாயிலிருந்து  தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 கோடியே 20 இலட்சம் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07 கிலோ நிறையுடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொக்கலட்டுகள் கொண்டு வரப்பட்ட பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து குறித்த தங்க நகைகள் கொண்டு வரப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவி எடுத்த தவறான முடிவு

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான ம.தர்சிகா என்ற மாணவியே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
சண்டிலிப்பாயிலுள்ள பாடசாலை ஒன்றில் இவர் கற்கிறார். பதின்ம வயதுடைய இவரது இறப்புக்கான காரணம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரமாக இருக்கிறது.
நுளம்புச் சீலை கட்டிவிட்டு உறங்குமாறு பெற்றோர் மாணவிக்கு கூறியபோதும், மாணவி அவ்வாறு செய்யவில்லை என்றும் அதனால் பெற்றோர் மாணவிக்கு அடித்தனர் என்றும் அதனாலேயே மாணவி அவ்வாறு முடிவெடுத்துள்ளார் என மரண விசாரணையின் பின்னர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டு அறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கியபோது வீட்டுக்காரர் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டமை தெரியவந்தது.
பொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இறப்பு விசாரணை மேற்கொண்டனர். சடலம் நேற்றுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலகில் நீண்ட கடல் எல்லையைக் கொண்ட நாடு



உலகில் நீண்ட கடல் எல்லையைக் கொண்ட நாடு கனடா ஆகும்.சுமார் 243.977 km (151.600 மைல்கள்).மேலும் பாரீஸ் க்கு அடுத்து அதிக பிரைஞ்ச் பேசும் நகரமும் கனடாவின் மொன்றியல் நகராகும். (montreal)

உங்கள் ஸ்மார்ட்போன்கள் வாழும் கிருமிகள் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.

நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கத்தேய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னொலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது.
எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் வரலாற்றில் ஒரேயொரு முறைதான் பனிப்பொழிவு இடம்பெற்றது.12-03-1857 ம் ஆண்டில் மட்டுமே இது இடம்பெற்றது.

கியூபாவின் வரலாற்றில் ஒரேயொரு முறைதான் பனிப்பொழிவு இடம்பெற்றது.12-03-1857 ம் ஆண்டில் மட்டுமே இது இடம்பெற்றது.

Sunday, December 10, 2017

யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றி விட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றம் விரைவில் எனக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும், இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.
கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கி விட்டது.
யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டேன். அடுத்ததாக மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளேன். அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் நேற்று இரவு நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, லே பகுதியில் இருந்து சுமார் 102 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் ஆட்டம் கண்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் சீன எல்லை பகுதியிலும் உணரப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய தலைநகர் புதுடெல்லி, ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரமும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி மாபெரும் பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை நேற்று காலை நடாத்தினர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையினை வலிறுத்தியும், அரசாங்கத்தினை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர்.

கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும் போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் தாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"அரசே அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீயே பொறுப்பு கூறவேண்டும், சிறைச்சாலைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்து, மரணச் சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம், சர்வதேசமே எமக்காக குரல்கொடு அதற்காக அழுத்தம் கொடு, எமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், எனது மகன் எங்கே?, எனது அப்பா எங்கே?, காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினை திறந்து சர்வதேசத்தினை ஏமாற்றாதே" போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியானது கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது.

அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இணையத்தின் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

தமது பிள்ளைகள் இன்னும் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் இன்னும் நம்புவதாகவும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், "சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்" என்ற, கருப்பொருளில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

உலகின் சிறிய பறவை (Bee hummingbird) கியூபாவில் உள்ளது.மேலும் உலகின் அரிய மீன் இனமான (The manjurai) கியூபாவில் மட்டுமே கிடைக்கும்

உலகின் சிறிய பறவை (Bee hummingbird) கியூபாவில் உள்ளது.மேலும் உலகின் அரிய மீன் இனமான (The manjurai) கியூபாவில் மட்டுமே கிடைக்கும்

112 ஓட்டங்களுடன் சுருண்டது இந்திய அணி

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பீல்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
தொடக்கம் முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேத்யூஸ் வீசிய இரண்டாவது ஓவரில் மூன்றாவது நடுவரின் உதவியுடன் தவானை வெளியேற்றியது இலங்கை அணி.
தவான் ரன்கணக்கைத் துவங்காமலேயே ஆட்டமிழக்க, கேப்டன் ரோகித் ஷர்மா 2 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளைச் சந்தித்து ரன்னே எடுக்காமல் மோசமான சாதனையுடன் வெளியேறினார்.
அதிக பந்துகளைச் சந்தித்து ரன் கணக்கைத் தொடங்காமல் வெளியேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முதல் பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் பவர் பிளேவில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே. மணீஷ் பாண்டே 2 ரன்களிலும், அறிமுகவீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
16 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்துவந்த பாண்ட்யா 10 ரன்களிலும், புவனேஷ்வர் குமார் ரன்னே எடுக்காமலும் வெளியேற இந்திய அணி 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல், 10 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 8-வது விக்கெட்டுக்கு குல்தீப் யாதவுடன் கைகோர்த்த மகேந்திரசிங் தோனி, ரன் குவிப்பை வேகமாக்கினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பும்ரா ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தனிஒருவனாய் போராடிய தோனி, 78 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் அரைசதமடித்தார்.
ஒரு கட்டத்தில் 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணி 100 ரன்களை தோனியால் எட்டியது. பொதுவாக ரன்மழை பொழியும் தரம்சாலா மைதானத்தில் இந்திய அணி 36.3 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.
கடைசி விக்கெட்டுக்கு சஹாலுடன் கைகோர்த்த தோனி,  25 ரன்கள் சேர்த்தார். தோனி 87 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இவரை உங்களுக்கு நினைவிருக்கின்றதா?

ஒடிசா மாநிலம் கலாஹந்தியில், கடந்த ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு வர ஆம்புலன்ஸுக்குத் தர பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற தானா மஜ்கியை நினைவிருக்கிறதா?

ஆம்.. அவரே தான். தானா மஜ்கி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காசநோய் பாதித்து உயிரிழந்த தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி, மகளுடன் நடந்து சென்ற தானா மஜ்கியின் புகைப்படம் சமூகத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து அவருக்கு பலரும் நேசக் கரம் நீட்டினர்.
அதோடு மட்டுமல்ல, தானா மஜ்கி குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க பஹ்ரைன் பிரதமர்  முன்வந்தார். தானா மஜ்கி குடும்பத்துக்கு பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா, ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.
இந்த நிலையில், தானா மஜ்கிக்கு, பிரதான் மந்திரி கிராமீன் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
வீடு கட்டி முடிக்கப்படும் வரை அவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் வசித்துவருகிறார்.
அவரது மூன்று மகள்களும், புவனேஸ்வரில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அந்த பள்ளியே, முன்வந்து, மூன்று பெண்களுக்கும் இலவச கல்வியை அளித்து வருகிறது.
இதற்கிடையே, மஜ்கி மறுமணமும் செய்து கொண்டார். அவரது மனைவி தற்போது கர்பிணியாக உள்ளார்.

பலரது உதவிகளால், மஜ்கியின் கனவு பெரிதாக நினைவாகியுள்ளது. தற்போது அவர் ரூ.65,000 மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தை வாங்கி, அன்று எந்த சாலையில் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து நடந்து சென்றாரோ அதே சாலையில் புது மனிதனாக வலம் வருகிறார்.
சம்பவத்தின் பின்னணி: ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே தானா மஜ்கி என்பவரின் மனைவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இறந்த மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராததால் தானா மஜ்கி தனது தோளில் சுமந்தபடி 10 கிலோமீட்டர் வரை நடந்து சென்றார்.
கூடவே அவரது 12 வயது மகளும் அழுதபடியே நடந்து சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 9, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரம் வெளியானது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளிற்கிடையில் நிலவிய ஆசனப்பங்கீட்டு சிக்கலிற்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடந்த கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்பில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டன.

நேற்று காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இந்த சந்திப்பு நடந்தது. இதில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநான், வியாழேந்திரன், சுமந்திரன், ஆர்.இராகவன், சிறிகாந்தா, விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பங்குபற்றினர்.
இதில் குறிப்பிடத்தக்களவு விட்டுக்கொடுப்புக்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டுள்ளது.
மாவட்டரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ள ஆசனப்பங்கீட்டு விபரம் இதுதான்.
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வல்வெட்டித்துறை நகரசபை என்பன ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ளன. வேலணை பிரதேசசபையின் பிரதி தவிசாளரும், அங்கு 40% வேட்பாளர்களும்.
யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் ரெலொவிற்கு.
நல்லூர் பிரதேசசபை, வலி கிழக்கு, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபையும் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா இரண்டு வருடம் பங்கிடுவார்கள். நல்லூர், கரவெட்டி தெற்கு மேற்கு முதல் இரு வருடம் தமிழரசுக்கட்சிக்கு. இந்த மூன்று சபைகளில் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா 40%, 20% புளொட்டிற்கு.
கிளிநொச்சி
கிளிநொச்சியின் மூன்று சபைகளான கரைச்சி பூநகரி, பச்சிலைப்பள்ளி மூன்று சபைகளின் தவிசாளர்களும் தமிழரசுக்கட்சி. ரெலோவிற்கு மூன்றின் தவிசாளர்களும். இங்கு தமிழரசுக்கட்சிக்கு 60%, மற்றைய இரண்டு பங்காளிகளிற்கும் தலா 20% ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுனியா
நெடுங்கேணி பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு. வவுனியா நகரசபை மேயர் தமிழரசுக்கட்சி. பிரதி மேயர் புளொட். வவுனியா தெற்கு பிரதேசசபையை ரெலோ, புளொட் தலா இரண்டு வருடங்கள் பங்கிடும். யார் முதலில் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. செட்டிக்குளம் பிரதேசசபை ரெலோவிற்கு.
மன்னார்
மன்னாரில் மன்னார் நகரசபை, மாந்தை மேற்கு ரெலோவிற்கு. மன்னார் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு.
மட்டக்களப்பு
களுவாஞ்சிக்குடி, போரதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. மட்டு நகரசபை பிரதிமேயரும் ரெலோவிற்கு. செங்கலடி, ஆரையம்பதி பிரதேசசபைகள் ரெலோ, புளொட் பங்கிடும். ஏனைய சபைகள் தமிழரசுக்கட்சிக்கு.

அம்பாறை
திருக்கோவில், காரைதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. கல்முனை எதிர்கட்சி தலைவர் பதவியும் ரெலோவிற்கு. அங்கு கிடைக்கும் 8 உறுப்பினர்களில் 5 ரெலோவிற்கும், 3 தமிழரசுக்கட்சிக்கும். நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிக்கு.
முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பு தமிழரசுக்கட்சி. கரைத்துறைப்பற்று பிரதேசசபை ரெலோ, புளொட் பங்கிடும். உப தவிசாளர் தமிழரசுக்கட்சிக்கு. மாந்தை கிழக்கு ரெலோ, துணுக்காய் தமிழரசுக்கட்சிக்கு.
திருகோணமலை
அங்குள்ள மூன்று சபைகளிலும் தமிழரசுக்கட்சியே தவிசாளர் பதவியையும், உப தவிசாளர் பதவிகளையும் பெறும். ஏனைய கட்சிகளுடன் பேசி, உறுப்பினர்களை நியமிக்கலாமென முடிவாகியுள்ளது.
ஹிக்கடுவை - திரணாகம பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றிற்கு அருகில் கடலில் நீராட சென்ற ரஷ்ய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


52 வயதுடைய குறித்த நபர் தனது மனைவியுடன் நேற்று பிற்பகல் நீராட சென்றுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அவரின் சடலம் தற்போதைய நிலையில் காலி கராபிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

Friday, December 8, 2017

யாழில் ரயிலுக்குப் பதிலாக சொகுசு பஸ்கள் சேவையில்

ரயில் சேவைகள் இடம்பெறாததை அடுத்து கடுகதி ரயில் சேவைகளுக்கு பதிலாக சொகுசு பஸ்சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.


காங்கேசன்துறை , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை இன்று காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கடுகதி ரயில்சேவைகள் இடம்பெறாததினால் ஐந்து சொகுசு பஸ்வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ரயில் பிரிவில் இடம்பெற்று வரும் வேலைப்பகிஷ்கரிப்பின் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை 5600 பஸ்களை நாடுபூராகவும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த பஸ்களில் ரயில்வே பருவகாலச்சீட்டை பயன்படுத்தி இலவசமாக இலங்கை பஸ்சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று அதிகாலை அவசர அறிவிப்பு விடுத்து உள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா? கெட்டதா?


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறு ஏற்பட்டாலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அவ்வாறு கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சில நல்ல உணவுகள் மற்றும் சில கெட்ட உணவுகளும் உள்ளன. அதிலும் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தால், அவர்கள் வீட்டில் இருப்போர் பல ஆலோசனைகளைச் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும் போது நட்ஸ் மற்றும் சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்வது.

அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உண்ணும் உணவுகளில் உள்ள நல்லது மற்றும் கெட்டது பற்றியும் அதிகம் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பத்தின் போது பப்பாளியை சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எப்படி பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுமோ, அதேப்போல் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலும், சிலர் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வார்கள். சரி, இப்போது அன்னாசியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா, இவற்றில் எது உண்மை என்று பார்ப்போமா!!!

குறை பிரசவம்: கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடக்கூடாத பழங்களில், அன்னாசியும் ஒன்று. ஏனெனில் அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால், அதில் உள்ள புரோமிலியன் (Bromelian) கருப்பையை பலவீனமடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி கருப்பை சுவர்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும். நிறைய பெண்களுக்கு இதனை சாப்பிட்டதால், குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கருச்சிதைவு: அன்னாசிப் பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதில் உள்ள புரோமிலியன் (Bromelian) என்னும் நொதி, பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) நொதிக்கு சமமானது. புரோமிலியன் கருப்பையின் சுவற்றை மிகவும் மென்மையாக்கிவிடுவதால், கருவை சுமக்க முடியாத நிலையை உண்டாக்கி, சிதைவை ஏற்படுத்துகிறது. அதிலும் அன்னாசியில் பச்சை மற்றும் கனியாமல் கெட்டியாக இருக்கும் பழத்தை சாப்பிடுவது மிகுந்த கெடுதலை ஏற்படுத்தும். ஆகவே இதனை ஒரு 10 மாதம் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது.





மற்ற பிரச்சனைகள்: பொதுவாகவே அளவுக்கு அதிகமாக அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலே, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள அமிலம் மிகவும் மோசமானது. ஆகவே இத்தகைய பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களுக்கு எவ்வளவு பிரச்சனையை உண்டாக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

என்ன தான் இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு அவசியமான, செரிமானத்தை சரியாக நடத்தும் நொதியைக் கொண்டாலும், இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த பழத்தை சாப்பிட்டு, அந்த மாதிரியான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது என்று மற்றவர்களை சாப்பிட சொல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கர்ப்பப்பை வலுவுடன் இருக்கலாம். ஆனால் அவ்வாறே அனைவருக்கும் நடக்கும் என்று நினைப்பது தவறானது. எனவே பாதுகாப்பான பிரசவம் நடைபெற வேண்டுமெனில், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.

இயேசு நாதரின் படத்தில் நிகழும் அதிசயம்

இலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இயேசு நாதரின் உருவத்திலிருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருகிறது.
வத்தளை - சென்.அன்டனிஸ் தேவாலயத்திலுள்ள இயேசு நாதரின் உருவம் பொறிக்கப்பட்ட புகைப்படத்திலேயே வியர்வை வடியும் அதிசயம் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிசயத்தைக் காண பெருந்திரளான பக்தர்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் போன்று வடியும் இந்த திரவம் வியர்வைக்கு சமமானதாக உள்ளதெனவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இவ்வாறு புகைப்படத்தில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருவதாக வத்தளை தேவாலய வணக்கத்துக்குரிய அருட்தந்தை சன்ஜீவ் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
வியர்வை வடியும் புகைப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின், சாலக்குடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
கண்ணீர் போன்ற நீர்த்துளிகள் வடியும் இந்த படம் ஆரம்பத்தில் நிரோமி அமரசிங்க என்ற பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக அருட்தந்தை மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைக்கு மாறான நிகழ்வு ஏற்பட்ட பின் இந்தப் படம் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வப்போது இயேசு நாதரின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்ததாக நிரோமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உரிய முடிவுக்கு தற்போது வர முடியாது. இது தொடர்பில் அறிவியல் விளக்கம் இருக்கலாம். ஆனால் யாரால் அதை நிரூபிக்க முடியும் என்று எனக்கு தெரியாதென அருட்தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, December 7, 2017

கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (07) செலுத்தியது.

இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா்.
கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்து அமைப்பின் உறுப்பினா்.சுப்பையா மனோகரன்
இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் சுயேட்சையாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றோம், தற்போதுள்ள நிலைமைகளின் படி இந்த உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாா் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடைய அமைப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவா்கள் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமையினால் ஏமாற்றமடைந்த மக்களுக்கு அவா்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த தேர்தல் மக்களாக முன்வந்து ஒவ்வொரு வட்டாரங்களிலும் தங்களுக்கான வேட்பாளர்களை வழங்கி ஆதரவளித்து நிற்கின்றாா்கள். எனவே கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா் தலைமையிலான சுயேட்சை குழுவொன்று வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவம் என்பதில் எமக்கு அதிக நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தாா்

Wednesday, December 6, 2017

வெள்ளவத்தை கடற்கரையிலும் அதிகளவான மீன்கள்


வெள்ளவத்தை கடற்கரையிலும் அதிகளவான மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழமையை விடவும் நேற்றையதினம் பெருந்தொகையான மீன்கள் வெள்ளவத்தை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.
அண்மைக்காலமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள கடற்கரைகளில் மீன்கள் பெருமளவில் ஒதுங்கி வரும் நிலையில், வெள்ளவத்தையிலும் ஒதுங்கியுள்ளமை அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் கடல் பகுதியில் அதிகமான மீன்கள் வந்துள்ளமை தொடர்பில் விசேட ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .
கடல் வெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றம், அமிலத்தன்மை மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெனரால் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையில் மீன்கள் ஒதுங்கியமை குறித்து நாரா நிறுவனத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடற்கரையில் வழமையை விடவும் அதிகளவான மீன்கள் ஒதுங்குவதால் சுனாமி அனர்த்தம் ஏற்படும் என்று கூற முடியாது. அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
சுனாமி பேரலைகள் ஏற்படுவது என்றால் கடலுக்குள் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்படும் பட்சத்தில் அது சாத்தியமாகும் என நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அனில் பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழ் கடலில் 10 - 20 கிலோ மீற்றர் தூரத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதுவரை அப்படியான பூமியதிர்ச்சிகள் ஒன்றும் பதிவாகவில்லை. இது குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இன்று அல்லது நாளை பூமியதிர்ச்சி ஏற்படும் என்பதனை எங்களால் முன்கூட்டியே கூற முடியாது.
அதிக பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் கூட இதனை முன்கூட்டியே கூறமுடியாத நிலை காணப்படுவதாக தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனர்த்தம் தொடர்பில் தகவல் அறிந்து கொள்வதற்காக 117 என்ற இலக்கம் 24 மணித்தியாலமும் செயற்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதி கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்

இலங்கையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் வாகனத்தை 5 அல்லது 6 லட்சம் ரூபாவுக்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக இந்த மோட்டார் காரினை பயன்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதையில் நடுவீதியில் கிடந்த பெண்

மதுபானத்தைக் குடித்து மதிமயங்கிய நிலையில், வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த பெண்ணை எழுப்புவதில் தோல்வியடைந்த பொலிஸார், அப்பெண்ணை அப்படியே விட்டுச் சென்ற சம்பவமொன்று, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


வெளிப் பிரதேசமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவரே, மதுபோதையில் குறித்த பிரதேசத்துக்கு வந்து, நிதானம் தவறிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்துள்ள கிராம மக்கள், இப்பெண் மது அருந்தியுள்ளமை பற்றி அறியாது, அப்பெண்ணுக்கு வேறேதேனும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.

அதன்படி, அரை மணிநேரத்துக்குள் உரிய இடத்துக்கு வந்த பொலிஸார், அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியுள்ளமையாலேயே, அவர் நிதானம் தவறிய நிலையில் வீதியோரத்தில் விழுந்துக் கிடந்துள்ளார் என, அறிந்துகொண்டனர்.

எனினும், அப்பெண்ணை விசாரிப்பதற்காக எழுந்திருக்கச் செய்வதற்கு பொலிஸார் முடிந்தளவு சத்தம் போட்டும், அப்பெண்ணால் எழுந்திருக்க முடியவில்லை. பெண் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு வந்திருக்காததால், வேறு வழியின்றி பொலிஸார் சென்றுவிட்டனர்.

சற்றுநேரத்தில், போதை ஓரளவுக்குத் தெளிந்த அப்பெண், பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்ததை அறிந்ததுடன், தான் வீதியில் வீழ்ந்து கிடந்ததை நினைத்து வெட்கித்தவராக, ஆடையைச் சரி செய்துகொண்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடித் தப்பியதாகவும் சம்பந்தப்பட்ட பெண் வெளியூர்வாசி என்று தெரியவருவதாகவும் கிராம மக்கள் கூறினர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானபடுத்திய நபர்....

லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானபடுத்திய நபர்....
லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானபடுத்திய நபர்....
பிரபல ரிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
குடும்பத் தகராறை தீர்த்து வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நேற்று வெளியான பிரமோவில் லட்சிமியை பார்த்து ஒருவர் ” இந்த நிகழ்ச்சியை இனிமேல் நீங்கள் தொகுத்து வழங்கப்போவதில்லை” எனக் கூறினார். இதனால் அவர் கோவமாக வெளியேறினார்.
அதனைதொடர்ந்து தற்போது வெளியான பிரமோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருவர் சரமாரியாக கேள்விகேட்கிறார். அதற்கு அவர்
”இதற்கு எல்லாம் நான் பயப்பட போவதில்லை. யார் வேண்டுமானாலும் என்னை கேள்வி கேட்கட்டும் நான் பதில் சொல்ல தயார்” என்று பதிலித்துள்ளார்.
இது பிரமோஷனுக்காகவா இல்லை உண்மையில் எதாவது பிரச்சனையா? என்று இன்னும் சரிவர தெரியவில்லை

பிரபல தொகுப்பாளரின் திடீர் திருமணம்!



தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளியான மணிமேகலை ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார்.
மணிமேகலையின் காதலுக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஹுசைனை இன்று மணிமேகலை திருமணம் செய்து கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ஹுசைனுக்கும் எனக்கும் இன்று திருமணமாகி விட்டது, அப்பாவை சமாதானப்படுத்த முடியாத நிலையில் எல்லாம் கைவிட்டு போனதால் திடீரென இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
நிச்சயம் ஒரு நாள் அப்பா இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை என பதிவிட்டுள்ளார்.

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவன்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி கொடுத்த நம்பமுடியாத தண்டனை

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவன்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி கொடுத்த நம்பமுடியாத தண்டனை
கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவன்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி கொடுத்த நம்பமுடியாத தண்டனை
தமிழகத்தில் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனுக்கு பாடம் புகட்ட, அவரது மனைவி மர்ம உறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆட்டோ டிரைவரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் பரமேஸ்வரனுக்கு விராட்டிபாத்தில் உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது.
இதை அறிந்த சசிகலா, தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவிக்கு தெரிந்துவிட்டதால், அவர் வீட்டுக்கு வருவதையே நிறுத்தி விட்டு விராட்டிபத்திலேயே தங்கியுள்ளார்.
அதன் பின் இது குறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு பொலிசார் கண்டித்து அனுப்பியும், இவர் தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இதனால் பெரிதும் ஆத்திரமடைந்த சசிகலா, இவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இனி மேல் இதைப் பற்றி எதுவும் பேசமாட்டேன், சண்டை போடமாட்டேன் என்று பரமேஸ்வரனை போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
அதன் பின் மனைவியின் பேச்சை நம்பி வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த போது, கொதிக்கும் எண்ணெய்யை அவரது மர்ம உறுப்பில் ஊற்றியுள்ளார்.
வலி தாங்கமுடியாமல் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் இது குறித்து சசிகலா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் கோரிக்கை
பெண்கள் சுன்னத் செய்யப்படுவதற்கு தடைவிதிக்குமாறு கோரும் முஸ்லிம் பெண்கள்
சிறு வயதில் பாலுறுப்பில் சுன்னத் செய்யப்பட்ட இலங்கை பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளவை சந்திக்க உள்ளனர்.
பெண்கள் சுன்னத் செய்யப்படும் சட்டத்திற்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுப்பதற்காகவே இவர்கள் நீதியமைச்சரை சந்திக்க உள்ளனர்.
நாட்டில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் மேற்கொண்டு வரும் பெண்களுக்கு சுன்னத் செய்யும் சம்பிரதாயத்திற்கு எதிராக கொள்கை ஒன்றை பின்பற்றி வரும் இவர்கள் அண்மையில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக தற்போது சூடான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்னா என்ற இந்த முறை பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது என பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்மால் மீண்டெழ முடியாத பாதிப்பு ஏற்படுவதாக சில முஸ்லிம் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரத்தில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றி, முஸ்லிம் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக சட்டத்தரணி எர்மிசா டெகல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சுன்னத்தை ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பு பெண் உறுப்பு சிதைப்பு என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியைக் கொலைசெய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை



யாழ்ப்பாணம் - வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து அவரை கொலை செய்ய குற்றத்திற்காக கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார்.
வடமராட்சி, மணற்காடு - குடத்தனையில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது-25) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த நீதிபதி இளஞ்செழியன்,
“வழக்கின் எதிரி கொலை செய்யும் பொது நோக்கத்தோடு திட்டமிட்டு அவரது மனைவி மீது தீப்பற்றவைத்தார் என்பது வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டவில்லை.
எதிரி கைமோசக்கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற முடிவுக்கு இந்த மன்று வருகிறது. அந்தக் குற்றத்துக்காக எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், குற்றவாளி 5 ஆயிரம் ரூபாய் தண்டம் பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று தீர்ப்பளித்தார்.
வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகிவந்தார்.

கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபர்.

கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபர்.
கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபர். கொடக்கவெல - பள்ளேபெத்த, தம்பேதென்ன பிரதேசத்தில் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கறுவா பட்டைகளை நைப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்றிரவு இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அஹூங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரின் தலை, கால்கள் மற்றும் கைகள் வெட்டி துண்டாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைகள் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. கொலை செய்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபரை கைது செய்ய கொடக்கவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, December 5, 2017

கல்கிஸ்ஸையில் தொடரும் விபச்சார விடுதி வேட்டை

கல்கிஸ்ஸ , காலி வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கல்கிஸ்ஸ பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய இந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாகவும்,இதன்போது இதன் முகாமையாளர் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண்கள் மேகாடவௌ,சீதுவ,தம்புளை,பலுகஸ்,பாதுக்க,குண்டசாலை மற்றும் ராஜாங்கணைப் பகுதிகளைச் சேர்ந்த 27,28,35,36,38,39,40 வயதானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தப் பெண்களை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாழமுக்கம் வலுவடைகிறது! சூறாவளி ஆபத்தில்லை


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது இலங்கையில் இருந்து 800 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், இன்னும் 12 மணிநேரத்தில் அது வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், இலங்கையை நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி தாக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து நேற்று கருத்து வெளியிடுகையில்,
வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம், புயலாக உருவெடுத்து, இலங்கையை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

அந்த காற்றழுத்தம், இலங்கைக்குத் தென்கிழக்காக 950 கி.மீ தொலைவில் உள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் அது வலுவடையும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் அதன் பாதை இன்னமும் தெளிவாக இல்லை.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். காற்றின் வேகம் அதிகரிப்பதால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை.
தற்போதைய நிலையில் இலங்கையை சூறாவளியோ, ஆழிப்பேரலையோ தாக்கும் ஆபத்து இல்லை. எனினும், வானிலை எந்த நேரத்திலும் மாற்றமடைவதற்கு சாத்தியங்கள் உள்ளன.
நாங்கள் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இப்போது நிச்சயமாக எந்த பதற்றமும் அடைய வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, வடக்கு, கிழக்கு கடற்பகுதியில் 90 தொடக்கம் 100 கி. மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது இலங்கையில் இருந்து 800 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், இன்னும் 12 மணிநேரத்தில் அது வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
அந்த காற்றழுத்தம் இலங்கைக்கு வடமேற்காக நகர்வதாகவும், இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
- Puthinappalakai