Advertisement |
நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் தரக்கூடியதும், காய்ச்சலை தணிக்கவல்லதும், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதுமான கேழ்வரகுவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். உன்னதமான உணவாக விளங்குவது கேழ்வரகு.
இதில், புரதம், விட்டமின், மினரல் உள்ளிட்ட ஆரோக்கியம் தரக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன. கேழ்வரகுவை சாப்பிட்டுவர நமக்கு நார்ச்சத்து மிகுதியாக கிடைக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உடையது. கேழ்வரகுவை பயன்படுத்தி முதியோர், குழந்தைகள், நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு, பனைவெல்லம், பால். கேழ்வரகை நீர்விட்டு ஊறவைத்து, அதன் தோலை நீக்கி விட்டு காயவைத்து மாவாக்கவும்.
இந்த மாவை நீர்விட்டு கலக்கி, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் பனைவெல்ல கரைசல் சேர்த்து கஞ்சி பதத்தில் காய்ச்சவும். பின்னர் காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த கஞ்சியை சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். பல்வேறு நன்மைகள் கொண்ட கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கெட்ட கொழுப்பை கரைக்கிறது. ரத்தசோகையை போக்கும் உணவாகிறது. கேழ்வரகு புல்லை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு புல், மிளகுத்தூள், சீரகம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், சிறிது சீரகம், ஒரு கைப்பிடி கேழ்வரகு புல், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் குணமாகும். வயிற்று வலி, வயிற்று கடுப்பு, உப்புசத்தை போக்கும் உள்மருந்தாகி பயன்தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்கும் கேழ்வரகுவை பயன்படுத்தி கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு, விளக்கெண்ணெய். செய்முறை: கேழ்வரகு மாவை நீர்விட்டு கரைக்கவும்.
இதை, ஒரு பாத்திரத்தில் போட்டு களிபதத்தில் வேக வைக்கவும். இதனுடன், விளக்கெண்ணெய் விட்டு கலக்கவும். இந்த பசை இளம்சூடாக இருக்கும்போது கட்டிகள் மீது பூசிவர கட்டிகள் பழுத்து உடையும். வீக்கம், வலி சரியாகும். இளம் தாய்மார்கள் கேழ்வரகை உணவாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றில் வளரும் குழந்தைகளின் எலும்பு, பற்கள் பலம் பெறும். மூளை ஆரோக்கியமாக இருக்கும்.
கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்குகிறது. கொழுப்பு சத்தை வெளியேற்றும். தலைவலி, தலைபாரம், தலைநீர் ஏற்றத்தை சரிசெய்யும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மிளகு, மஞ்சள், பால். இரவு நேரத்தில், அரை ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் மஞ்சள் பொடி ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைத்து சிறிது இனிப்பு சேர்த்து குடித்துவர தலைநீர் ஏற்றம், தலைவலி குறையும். நெஞ்சக சளி வெளியேறும்.
0 comments: