Tuesday, October 3, 2017

பண மோசடி வழக்கு: தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைதாகி ஜாமினில் விடுவிப்பு

Advertisement
பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஆறரை லட்சம் பவுண்டுகள் கட்டி ஜாமினில் அவர் வெளியே வந்தார். அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கள்ளத்தனமாக கருப்புப்பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணை நிலையில் மட்டுமே உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவரது வக்கீல் தெரிவித்ததையடுத்து, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து, இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

இவற்றின் அடிப்படையில் விஜய் மல்லையா கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: