Advertisement |
மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
எனினும், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களில் ஒரு பிரிவினருக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா, அல்-உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
உரிய அனுமதியின்றி தங்கள் மாநிலத்தில் தங்கியுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற தனிக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தி இருந்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
13-ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பான சர்வதேச சட்ட நெறிமுறைகள் மற்றும் அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைத்து சமர்ப்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் போது உணர்வு ரீதியாக அல்லாமல் சட்ட ரீதியாக வாதாடுமாறும் இருதரப்பினருக்கும் நீதிபதி அறிவுறை கூறினார்.https://tamilwinblog.blogspot.com/search/label/health
0 comments: